கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட உத்தரவிடப்பட்டிருந்த 22 பேரில் 14 பேர் மட்டும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மற்ற 8 பேர் மீதும் வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி கோவையில் 17 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 58 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக, அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் பாஷா உள்ளிட்ட 44 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. 64 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போதே ஆயுள் தண்டனை கைதியான சபூர் ரஹ்மான் இறந்துவிட்டார். மேலும், முஜி, முகமது அம்ஜத் அலி ஆகியோர் தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந் நிலையில், பாஷா தவிர ஆயுள்தண்டனை பெற்ற அனைவரும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதை எதிர்த்து வெள்ளியங்கிரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து கடந்த வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில், முகமது அன்சாரி உள்பட 18 பேர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவர்களுக்கு நீதிமன்றம் விதித்த ஆயுள்தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலி உள்பட 22 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை.ஆகவே, ஆயுள்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அவர்கள் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில் விடுதலை செய்யலாம் என தெரிவித்திருந்தனர்.
இந்த உத்தரவு கோவை சிறைக்கு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து 14 பேர் திங்கள்கிழமை விடுதலையாகினர். ஆனால் மற்ற 8 பேர் மீதும் வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.